விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ரக்பி நடுவர்கள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இந்த சந்திப்பின் போது, புனித தோமஸ் கல்லூரி மற்றும் கல்கிசை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற ரக்பி போட்டி நிறைவடைந்ததன் பின்னர், நடுவர்களின் தீர்ப்பினால் அதிருப்தியடைந்த அறிவியல் கல்லூரியின் ஆதரவாளர்களினால் நடுவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகளில் நடுவர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், நடுவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்கள் விளையாட்டு அமைச்சினால் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகளின் போது நடுவர்களின் முக்கியத்துவம் குறித்து பாடசாலைகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ரக்பி கால்பந்து நடுவர்கள்(SLSRFR) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ரக்பி போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளமையினால், பாடசாலைகளுக்கிடையிலான அனைத்து ரக்பி போட்டிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கல்கிசையில் கடந்த மாதம் 30ம் திகதி கல்கிசை, புனித தோமஸ் கல்லூரி மற்றும் கல்கிசை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற ரக்பி போட்டி நிறைவடைந்ததன் பின்னர், நடுவர்களின் தீர்ப்பினால் அதிருப்தியடைந்த அறிவியல் கல்லூரியின் ஆதரவாளர்களினால் நடுவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இருப்பினும், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடனான கலந்துரையாடலின் பின்னர், ரக்பி நடுவர்கள் சங்கத்தினர் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகளில் அடுத்த வாரம் முதல் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.