சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்தியா முன்னிலை 

சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே வெற்றியீட்டியிருந்த போதும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையிலுள்ளது. 

1-1 என்ற ரீதியில் தொடர் சமநிலையிலிருந்த நிலையில், இன்று(10.07) நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது. சிம்பாப்வே, ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் அணித் தலைவர் சுப்மன் கில் 66(49) ஓட்டங்களையும், ருத்துராஜ் கெய்வாட் 49(28) ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 36(27) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சிம்பாப்வே அணி சார்பில் பந்துவீச்சில் முசரபானி, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

183 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. சிம்பாப்வே அணி சார்பில் டியோன் மயர்ஸ் 65(49) ஓட்டங்களையும், கிளைவ் மடாண்டே 37(26) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் 3 வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.   

இதன்படி இந்திய அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில்  2-1 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் தெரிவு செய்யப்பட்டார்.   

இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 4வது போட்டி எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply