மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாரிய முதலீட்டாளர்களை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (18.07) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.
முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் இதன்போது போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“முச்சக்கர வண்டிகளே மக்களின் பிரதான போக்குவரத்து சாதனமாக மாறியுள்ளது. ஒரு புறத்தில் விவசாயம் செய்யும் அதேநேரம், மறுபுறம் முச்சக்கர வண்டிகளை ஓட்டி வருமானம் ஈட்டுகின்றனர். 2022-2023 ஆண்டு சிறு போகத்தில் நல்ல அறுவடை கிடைத்தது. அதன் பிறகு, பெரும்போகத்திலும் நல்ல விளைச்சலைப் பெற முடிந்தது. அதற்கேற்ப விவசாயிகளின் கைகளுக்குப் பணம் வரத் தொடங்கியது. விவசாயிகளின் வர்த்தகம் வளர்ச்சியடைந்ததால், போக்குவரத்துச் செயற்பாடுகளும் அதிகரித்தன.
2023 இல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் முச்சக்கரவண்டி சாரதிகளின் பொருளாதாரம் உயர்ந்தது. ஒருபுறம், விவசாயிகளின் விளைச்சல் செயற்பாடுகளுக்கு உதவும் அதேநேரம் முச்சக்கர வண்டி சாரதிகள் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.
இவ்விரு துறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. இந்த பொருளாதார வளர்ச்சியினால் தான் இரண்டு வருடங்கள் முடிவதற்குள் எமது நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க முடிந்தது. வேறு எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு வந்ததில்லை. ஆனால் நாம் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டிருப்பதோடு, 08 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தையும் பெற்றிருக்கிறோம்.
இன்று நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. நாம் இங்கிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாமல் முன்னெடுத்துச் செல்ல வேறு வழிகள் உள்ளதா? என்பது குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில்சார் முன்னேற்றுக்கான பரிந்துரைகள் இங்கு முன்வைக்கப்பட்டன. அந்த முன்மொழிவுகளை நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இத்தொழில் தொடர்பான சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த தொழில்சார் சட்டங்கள் தேவைப்படும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை செய்ய வேண்டிய முறைமை தொடர்பில் நீங்கள் தீர்மானிக்கலாம். நலன்புரிச் செயற்பாடுகள் குறித்தும் கனவம் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில், குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் மின்சார வாகனங்கள் குறித்து கவனம் செலுத்தும்போது, தற்போதுள்ள இந்த வாகனங்களுக்கு என்ன வகையான நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் உலகில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. இது தொடர்பாக உலக நாடுகள் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகளைப் பின்பற்றிச் செயலாற்ற வேண்டியதும் அவசியமாகிறது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேவை. முதலீடுகள் ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் வேளையில் கடந்த கால நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த பொருளாதார வளர்ச்சியின் பலன்களை இந்த நாட்டின் சாதாரண மக்களுக்கு வழங்குவதே எனது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. அந்த மக்களுக்காக, ஆறுதல் திட்டத்தை செயல்படுத்தினோம். அங்கு, நலத்திட்ட உதவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அத்துடன் இலவச காணி உரிமையை வழங்க உறுமய வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையை வழங்க ஆரம்பித்துள்ளோம். மேலும், பெருந்தோட்ட பிரதேசங்களை கிராமங்களாக மாற்றும் திட்டங்களும் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் இந்நாட்டின் சாதாரண மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு ஆர்ம்பிக்கப்பட்டவையாகும்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவிலான முதலீட்டாளர்களை நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அழைக்கிறோம். கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை முன்னேற்றும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் போது முச்சக்கரவண்டி சாரதிகளையும் நாம் மறந்துவிடவில்லை. இந்த பொருளாதார முறையை கைவிட்டால் என்ன நடக்கும்? கடன் நிபந்தனைகள் மீறப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டும். இன்று ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளோம். நாம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.