தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி ஒன்றை மகளிர் அணிக்கெதிராக பெற்றுக்கொண்டது. 144 ஓட்டங்களினால் வெற்றி பெறப்பட்டது.
இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து 20-20 சர்வதேசப் போட்டிகளில் தனது கூடுதல் எண்ணிக்கையான 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் மூன்றாவது சதமாகும். 20-20 சர்வதேசப் போட்டிகளில் 3 சதங்களை பெற்றவர்கள் தற்போது மூன்று வீராங்கனைகள் ஆகியுள்ளார்கள்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. விஷ்மி குணரட்ன 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, சாமரியோடு இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி ஹர்ஷிதா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும், அதன் பின்னர் அனுஸ்கா சஞ்சீவினி 31 ஓட்டங்களையும் பெற்றனர். சாமரி ஆட்டமிழக்காமல் இன்னிங்ஸை நிறைவு செய்தார். பந்துவீச்சில் மலேசியா அணி சார்பாக வில்பிரட் துரைசிங்கம் 2 விக்கெட்களையும், சோபிக்கா மணிவண்ணன் மற்றும் மஹ்ரியா இஸ்மாயில் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய மலேசியா அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. எல்ஸா ஹன்டர் 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷாஷினி ஜிம்ஹானி 3 விக்கெட்களையும், காவ்யா கவிந்தினி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணியின் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்னமும் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகவில்லை.