இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

16 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டி20 அணியின் புதிய தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

நடைபெற்று முடிந்த 2024ம் ஆண்டிற்கான டி20 உலக கிண்ணத் தொடரில் இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்த நிலையில், அணியின் தலைவராக செயற்பட்ட வனிந்து ஹசரங்க பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். 

அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறந்த வளர்ந்து வரும் வீரராக தெரிவு செய்யப்பட்ட சமிந்து விக்கிரமசிங்கவுக்கு இலங்கை குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த அஞ்சலோ மெத்தியூஸ், இம்முறை இலங்கை குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த், லங்கா பிரீமியர் லீக் தொடரில் பிரகாசிக்க தவறியிருந்தமையினால் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கண்டி, பல்லேகலவில் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

இலங்கை குழாம்: பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குஷல் ஜனித் பெரேரா, கமிந்து மென்டிஸ், தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுசங்க, டுனித் வெல்லாலகே, பினுர பெர்னாண்டோ, டினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, சமிந்து விக்கிரமசிங்க, அசித்த பெர்னாண்டோ

Social Share

Leave a Reply