இந்தியா அணியையும், DRS ஐயும் சேர்த்து வென்ற இலங்கை

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா அணியை 3 வருடங்களின் பின்னர் இலங்கை அணி வென்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 6 போட்டிகளுக்கு பின்னர் இந்தியா அணியை இலங்கை அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் வென்றுள்ளது.

1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு அணிகளும் விளையாடிய தொடரை இலங்கை அணி வென்றதில்லை. தொடர் தோல்வியிலிருந்து இலங்கை அணி தப்பித்துள்ளது. அதே காலத்தில் இரு அணிகளுக்குமான தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. 27 வருடங்களின் பின்னர் சமநிலை அல்லது தொடர் வெற்றி இலங்கை அணிக்கு கிடைக்கவுள்ளது.

241 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்தியா அணி மிகச் சிறந்த ஆரம்பத்தை பெற்றது. ரோஹித் ஷர்மா அதிரடி நிகழ்தினார். 97 ஓட்ட இணைப்பாட்டத்தை ஜெப்ரி வன்டர்சாய் முறியடித்தார். ரோஹித் ஷர்மா 64(44) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 50 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்ளை இந்தியா அணி இழந்தது. 6 விக்கெட்களையும் ஜெப்ரி வன்டர்சாய் கைப்பற்றினார். 5 விக்கெட்கள் பெறுதியை முதல் முறையாக பெற்றுக்கொண்டார்.

6 விக்கெட்களை பெற்று இந்தியா அணி தடுமாறிய வேளையில் வொசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அக்சர் பட்டேல் அதிரடி நிகழ்த்தி இந்தியா அணி பக்கமாக வெற்றி வாய்ப்பை உருவாக்கினார். 44 ஓட்டன்களுடன் அவர் சரித் அசலங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணி பக்கமாக வெற்றி வாய்ப்பு மாறியது. 38 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்து. நிலைத்து நின்று துடுப்பாடிய வொசிங்டன் சுந்தர் சரித் அசலங்கவின் பந்துவீச்சில் 15 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க இலங்கை அணி வெற்றி பெறுவது உறுதியானது.

இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 35 ஓட்டங்களையும், விராத் கோலி 14 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 07 ஓட்டங்களையும் பெற்றனர். லோகேஷ் ராகுல், ஷிவம் டூபே ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வன்டர்சாய் 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 06 விக்கெட்களை கைப்பற்றினார். சரித் அசலங்க 6.2 ஓவர்களில் 20 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய டுனித் வெல்லாளகே 05 ஓவர்களில் 39 ஓட்டங்களை வழங்கினார்.

இந்தியா அணி 42.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா அணியின் துடுப்பாட்டத்தின் போது விராத் கோலி LBW முறையில் ஆட்டமிழந்த போது மீள் பரிசீலனை பெறப்பட்டது. துடுப்புக்கும் பந்துக்கும் இடையில் இடைவெளி காணப்பட்டது. இருப்பினும் அல்ட்ரா எட்ஜ் பரிசோதனையில் துடுப்பில் பந்து பதிந்ததாக காட்டப்பட ஆட்டமிழப்பில் இருந்து தப்பினார். அக்சர் பட்டேலுக்கு ஆட்டமிழப்பு கோர நடுவர் வழங்கவில்லை. இலங்கை அணி மீள் பரிசோதனை செய்ய அதே போன்ற சம்பவம். ஆட்டமிழப்பு வழங்கவில்லை. மீள் பரிசீலனை இவ்வாறு சர்ச்சையாக அமைந்தால் அணிகளுக்கு பாதிப்பே. இந்த வீடியோ தயாரிப்பை செய்வது இந்திய நிறுவனமான IGP ஆகும். இந்தியா அணிக்கு சார்பாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக பல சர்ச்சைகள் ஏற்கனவே கிளம்பியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி முதற் பந்திலேயே பத்தும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டை இழந்து தடுமாறியது இலங்கை அணி. அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ் இணைந்து 74 ஓட்டங்களை பெற்று அணியை மீட்டு எடுத்தனர். ஆனால் அவர்கள் எடுத்துக்கொடுத்த ஆரம்பத்தை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தவற விட்டனர். அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரது விக்கெட்களையும் வொசிங்டன் சுந்தர் கைப்பற்றினார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் ஓரளவு துடுப்பாடிய போதும் சதீர 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சரித் அசலங்க 25 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். டுனித் வெல்லாளகே, கமிந்து மென்டிஸ் ஆகியோர் 72 ஓட்டங்களை ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். டுனித் 39 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ், அகில தனஞ்சய ஆகியோர் இறுதி நேரத்தில் ஓரளவு வேகமாக ஓட்டங்களை பெற்று கடந்த போட்டியின் ஓட்ட எண்ணிக்கையை கடந்தனர். கமிந்து மென்டிஸ் 40 ஓட்டங்களையும், அகில தனஞ்சய 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருக்குமென நம்பப்படுகிறது.

இந்தியா அணியின் பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 10 ஓவர்களில் 30 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ், ஆர்ஷிப் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

அணி விபரம்

உபாதை காரணமாக வனிந்து ஹசரங்க வெளியேறியுள்ள நிலையில் ஜெப்ரி வன்டர்சாய் அவருக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளப்பட்டார். மொஹமட் சிராஸ் நீக்கப்பட்டு கமிந்து மென்டிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி மாற்றங்களின்றி விளையாடியது.

இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, டுனித் வெல்லாளஹே, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ்

இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்

Social Share

Leave a Reply