மேல் மாகாணத்தின் இருவேறு பகுதிகளில் நேற்று(06.08) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாக்கவிட்ட பகுதியில் நேற்று(06.08) இரவு நபர் ஒருவரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், தற்பொழுது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா தம்மிட்ட பிரதேசத்தில் நேற்று(06.08) இரவு மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.