ஒலிம்பிக்: அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அருண தர்ஷன 

ஒலிம்பிக்: அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அருண தர்ஷன 

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்றிலிருந்து இலங்கையில் அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதி சுற்று நேற்று(06.07) இரவு நடைபெற்றிருந்தது. அதில் பங்கேற்றிருந்த அருண தர்ஷன 44:75 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து 5வது இடத்தை கைப்பற்றினார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும். 

இருப்பினும், ஓட்டம் நிறைவடைந்து சில நிமிடங்களின் பின்னர் அருண தர்ஷன தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓடுபாதை விதி மீறல் காரணமாகவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  

ஒலிம்பிக்: அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அருண தர்ஷன 

அருண தர்ஷன, கடந்த 4ம் திகதி நடைபெற்ற ஆரம்ப சுற்றில்(Heat 5) மூன்றாம் இடத்தை பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இந்த ஓட்டப் போட்டியை 44:49 வினாடிகளில் நிறைவு செய்திருந்தார். 400 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும்.

1997ம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுவோகாவில், சுகத் திலகரத்னேவிற்கு பின்னர் 400 மீட்டர் ஓட்டத்தை 45 வினாடிகளுக்குள் நிறைவு செய்த இலங்கை தடகள வீரராக அருண பதிவானார். 

இந்நிலையில், அருண அரையிறுதி போட்டியிலும் தன்னுடைய சிறந்த நேரத்தை பதிவு செய்வதற்கு முயற்சித்த போதும், ஓடுபாதை விதி மீறல் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக பாரிஸில் உள்ள இலங்கை அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். அவர்களுள் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தருஷி கருணரத்னவும், நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற கைல் அபேசிங்க, கங்கா செனவிரத்ன ஆகியோரும்,  பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்கவும் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தனர். 

இலங்கையின் தில்ஹானி லேகம்கே பங்கேற்கும் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் முதல் சுற்று இன்று(07.08) இலங்கை நேரப்படி பிற்பகல் 01.55 ஆரம்பமாகவுள்ளது. 

கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது. அமெரிக்கா 22 தங்கம், 31 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 82 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது. 

சீனா 22 தங்கம், 20 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலுள்ளது. அவுஸ்ரேலியா 14 தங்கம், 12 வெள்ளி, 09 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 03 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இந்தியா 61வது இடத்தில் உள்ளது. 

ஒலிம்பிக்: அரையிறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் அருண தர்ஷன 

Social Share

Leave a Reply