
பங்களாதேஷில் நடைபெறவிருந்த 2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் மகளிர் டி20 உலக கிண்ணத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், போட்டிகளை நடத்துவதில் பிரச்சிளைகள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின், டுபாய் மற்றும் சர்ஜஹா மைதானங்களில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உலக கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பங்களாதேஷில் போட்டிகளை நடத்துவதற்கு, அந்நாட்டு கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், போட்டிகளில் பங்கேற்கவுள்ள பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுகின்ற போதும், போட்டிகளை நடத்துவதற்கான உரிமம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமே காணப்படுகின்றது.