ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் வாக்குகளை குறித்த நாட்களில் அளிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் மற்றும் 12 ஆம் திகதிகளில், பணியிடம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்குகளிப்பதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு அல்லது தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி தபால் மூலம் வாக்களிப்பவரின் அடையாளத்தை தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட சரிபார்ப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.