பங்களாதேஷின் வரலாற்று வெற்றியுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்

பங்களாதேஷின் வரலாற்று வெற்றியுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்

பங்களாதேஷ் அணி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 30ம் திகதி தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பின்னர், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

12 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியின் இறுதி நாளான நேற்று(03.09) வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதன்படி, பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 2 – 0 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ், தொடரின் ஆட்ட நாயகனாக மெஹிதி ஹசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

பங்களாதேஷ் அணியின் முதலாவது இன்னிங்ஸின் போது, 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியிருந்த போது லிட்டன் தாஸ் 138 ஓட்டங்களைப் பெற்றமை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

இதுவரையில் சொந்த மண்ணிற்கு வெளியில் 2 முறைகள் மாத்திரம் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருந்த பங்களாதேஷ் அணி, மூன்றாவது வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது. இதற்கு முன்னர் 2009இல் மேற்கிந்தியத் தீவுகளையும், 2021இல் சிம்பாவேயும் பங்களாதேஷ் அணி வீழ்த்தி தொடர்களைக் கைப்பற்றியிருந்தது.

பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தமையினால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலிருந்து 8வது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக இலங்கை 8ம் இடத்திலிருந்து 7ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலாம் இடத்திலும், அவுஸ்ரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

பங்களாதேஷின் வரலாற்று வெற்றியுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்

இதேவேளை, ஐசிசி டெஸ்ட் தரப்படுத்தலில் 6ம் இடத்திலிருந்த பாகிஸ்தான் அணி 8ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7ம் இடத்திலிருந்த இலங்கை 6ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பங்களாதேஷ் அணி தொடர்ந்தும் 9ம் இடத்திலுள்ளது.

பங்களாதேஷின் வரலாற்று வெற்றியுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்

Social Share

Leave a Reply