
அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கு கூட அனுசரணை வழங்க முடியாத அரசாங்கம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
“புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர்.
மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும்.
அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார்.