இந்தியா, தமிழக – தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரி முதல்வர் இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். பயிற்சிப்பட்டறையை நாகம்பட்டி தெற்கு வீடு சுமதி அம்மாள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மேனாள் தலைவர் தனஞ்செயன், நாட்டார் வழக்காற்றியல் புலமும் கருத்தாக்கங்களும் எனும் பொருண்மையில் மைய உரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் உரைநடை நாட்டார் கதையாடல் எனும் தலைப்பிலும், நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் கார்மேகம் வழிபாடுகளும் சடங்குகளும் எனும் தலைப்பிலும், கோவிந்தபேரி பேரா. நவநீதகிருஷ்ணன் வாய்மொழிக் கவிதை மரபுகள் எனும் தலைப்பிலும், வழக்காற்றியல் துறை பேரா. ஜோசப் அந்தோணிராஜ் நாட்டார் நிகழ்த்துக்கலை மரபுகள் எனும் தலைப்பிலும், பேரா. பீட்டர் ஆரோக்கியராஜ் பொருள் சார் பண்பாடு எனும் தலைப்பிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் இயக்குநர் வெளியப்பன் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் நம் கலாச்சாரம், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறியும் மறைந்து வருகின்றன. நாட்டார் கலைகள், பாடல்கள் விடுகதைகள், கதைப்பாடல்களைப் பாடக் கூடிய மரபும் குறைந்து வருகின்றன என்று பேசினார்.
திசையன்விளை மற்றும் கோவிந்தபேரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர்கள் சுந்தர வடிவேல் மற்றும் வினோத் வின்சென்ட் இராஜேஸ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ்த்துறை பேராசிரியர்கள் பவானி, சிவகுமார் சித்ரா தேவி, திசையன்விளை பேராசிரியர்கள் தணிகைச்செல்வி மற்றும் ஆனந்தவேணி அமர்வுத் தலைவர்களாக வீற்றிருந்து ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.
கோயம்புத்தூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிப்பட்டறையை நாகம்பட்டி, திசையன்விளை மற்றும் கோவிந்த பேரி தமிழ்த்துறையும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து செய்திருந்தன.