
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கந்தளாய் ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று (16.09) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2025 ஆம் ஆண்டில் சமையலறை யுத்தத்தை நிறைவு செய்வேன். வீழ்ந்த நாடுகள் எழுச்சி பெற பல வருடங்கள் பிடித்தன. அரச ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டனர். சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால் நான் அதில் எதனையும் செய்யவில்லை. ஸ்திரநிலை ஏற்பட்டாலும் மீண்டும் சரிவு ஏற்படலாம். உறுதியான நிலையை ஏற்படுத்தவே 05 வருட காலம் கோருகிறேன்.
இந்த பகுதியில் துரியன் சாகுபடி செய்ய வேண்டும். துரியன் பழங்களை எடுத்து சீனாவுக்கு அனுப்பலாம். துரியன் ஏற்றுமதி மூலம் தாய்லாந்து 1,000 மில்லியன் டொலர்களைச் சம்பாதிக்கிறது. அடுத்த 05 வருடங்களில் கந்தளாய் பிரதேசத்தை விவசாய பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மேலும், திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பூர் சூரிய சக்தி பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. சுற்றுலாத் துறையும் மேம்படுத்தப்படும். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம்.இந்தப் பயணத்தை நாம் தொடர வேண்டும்.
எனவே, சமையலறை பிரச்சனையைத் தீர்க்க அனைவரும் கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.