
கொரோனா தொற்று காலத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போதும், முஸ்லிம் மக்களுக்காக அவர்களுடைய கலாச்சார, மத உரிமை என்பனவற்றுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 62 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி சஜித் பிரேமதாச தலைமையில்
கிண்ணியாவில் நேற்று (15.09) முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கோட்டாபயவின் தீர்மானத்திற்கு அச்சமடைந்த ரணிலும் அநுரவும் பயந்து ஒளிந்து கொண்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் அதற்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியது. தேசிய தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்ற ரணிலுக்கும் அநுரவிற்கும் அன்று இது குறித்து கதைப்பதற்கு முதுகெலும்பு இருக்கவில்லை.
அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்ட ஒரே தரப்பு ஐக்கிய மக்கள் கூட்டணியாகும். சிங்கள, முஸ்லிம், மலே என்று பல பிரிவுகள் காட்டாமல் இலங்கையர்கள் என்ற டிப்படையில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களை வெற்றி பெறச் செய்வதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆதரவை விட அதிகமான ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேய்ச்சல் நிலங்கள் குறித்து காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வையும், விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாவுக்கும், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம்.
எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நாட்டிற்கு ஒரு பெருமதியை சேர்த்திருப்பது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும்” என்றார்.
இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்கி சர்வதேச மொழி கல்வி, கணிணி விஞ்ஞானம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை விருத்தியடையச் செய்வோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.