தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (17.09) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
”சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வதா அல்லது வரிசை யுகத்திற்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் எனது எதிர்காலமன்றி உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். செப்டம்பர் 21 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும்.
உங்கள் திருமண தினத்தின் பின்னர் முக்கியமான நாள் இது. இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ முன்வந்தார்களா? அவர்கள் எங்கிருந்தனர். பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் பின்வாங்கினார்கள். இன்று நாட்டில் அனைத்தும் இருக்கிறது.
பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ள
ன. கஷ்டப்படும் போது வராமல் இப்பொழுது தேர்தலுக்காக உங்களிடம் வந்திருக்கிறார்கள்.
கடினமான பல முடிவுகளை எடுத்தேன். அதனை நீங்கள் தாங்கிக் கொண்டீர்கள். சிலர் ஒருவேளை தான் சாப்பிட்டார்கள். நீங்கள் உங்களின் பொறுப்பைச் செய்தீர்கள். அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றினார்களா, தேர்தலை நடத்துமாறு முதலில் கோரினார்கள்.
உரம் இல்லாத நிலையில் தேர்தல் நடத்தி என்ன பயன்? படகுகளுக்கு எரிபொருள் இல்லாத
நிலையில், தேர்தல் நடத்தி பயனிருக்கிறதா? அதனால் முதல் பணியாக உரத்தைப் பெற்றுக் கொடுத்தேன். எரிபொருளை கொடுத்தேன். அந்த நிலையில் எனக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.
தற்பொழுதும் கடினமான நிலை உள்ளது. சமையலறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்குத் தெரியும். அதனால் தான் சுமூக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். சம்பள உயர்வு வழங்கினேன். அஸ்வெசும வழங்கினேன். அது போதுமானதல்ல. அடுத்த வருடம் மேலும் சலுகை வழங்க வேண்டும்.
வரியைக் குறைப்பது ஐ.எம்.எப் நிபந்தனைக்கு முரணானது. சஜித்தும் அநுரவும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். நெருக்கடி ஏற்படும்.
மல்வது ஓய நீரை யோதவாவிக்கு கொண்டு வரவும் அதன் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவது குறித்து காதர் மஸ்தானுடன் கலந்துரையாடியுள்ளோம். அதனை நவீனமயப்படுத்துவோம். அவர் பெரிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார்.அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான பணத்தை ஒதுக்குவேன்.
மேலும், இந்தப் பகுதியை சூரிய சக்தி மையமாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். தெளிவான திட்டத்துடன் மக்களிடம் வந்திருக்கிறேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களுக்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகின்றோம்.
புலிகள் இயக்கத்தில் இணைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் பலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மன்னாரில் உள்ள சிங்களக் கிராமங்களில் வாழும் மக்கள் அஞ்சத் தேவையில்லை.
மன்னார் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு, மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு புதிய பாதை அமைக்கப்படும்” என்றார்.
மேலும், கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களித்து ஆரம்பித்துள்ள பணியைத் தொடர மக்கள் ஆணையை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டார்.