பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இறுதி கட்டம் நிறைவு – ரணில்

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இறுதி கட்டம் நிறைவு - ரணில்

தாம் எப்போதும் நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தாம் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி சமனல விளையாட்டரங்கில் இன்று (18.09) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தாம் எப்போதும் நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தாம் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”அன்று நாட்டு மக்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டனர். வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது தேடுவது கடினமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடவும் இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன்.

அதன் இறுதி கட்டத்தை இப்போது முடித்துவிட்டேன். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை போன்ற நாட்டிற்கு ஏற்ற கடன் நிலைத்தன்மை தொடர்பில் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளேன்.

மேலும், 18 நாடுகள் எமக்கு கடன் வழங்கியிருந்தன. அந்த நாடுகளில் 17 நாடுகளுடனும், சீனாவுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்றாவது குழுவான தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடன் நாளை உடன்பாடு எட்டப்படும். எனவே, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றி நாட்டை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அகற்றும் நிலைக்கு கொண்டு வந்து விட்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்.

ஆனால், இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். புதிய பொருளாதாரத்தை உருவாக்காவிட்டால், மீண்டும் கடன் வாங்கி நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்த வாழ்க்கை. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

டைட்டானிக் கப்பலைப் போல இந்த நாடு மூழ்கிக் கொண்டிருந்தது. கப்பல் முழுவதும் துளைகள் இருந்தன. கெப்டன்கள் யாரும் இல்லை. கப்பலில் இருந்த சிலரை இணைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்றினேன்.

எப்படியோ இப்போது கப்பலை சரியான திசையில் செலுத்திவிட்டோம். ஆனால் இதுவரை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவில்லை. மக்கள் ஆணையுடன் செப்டம்பர் 21 ஆம் திகதி கப்பலை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறேன்.

இன்று வெளிநாடுகளின் ஆதரவு எமக்குக் கிடைத்துள்ளது. இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய பொருளாதார கட்டமைப்பு அவசியம்.
இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எமது நாட்டிற்கு வருவார்கள். அந்த சமயம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டு செய்தியை அவர்களுக்குக் கொடுக்கலாம்.

ஐ.எம்.எப் உடனான நிபந்தினையை மாற்றினால் நிவாரணம் கிடைப்பது ரத்தாகும். டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயரும்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக இன்று அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார். சிலவேளை எமது திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

அப்படியானால் ஏன் நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க வேண்டும். நான் வேலைத் திட்டத்தை தொடரலாம். ஒன்றரை வருடங்களில் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் ஒதுங்குவதாக அநுர கூறியுள்ளார். அவரால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பது இதன் ஊடாக ஊர்ஜிதமாகிறது.

சஜித்தும் அநுரவும் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை இன்னும் மோசமாக்குவார்கள்.

சஜித் பிரேமதாச தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் பங்கேற்கவில்லை.இவ்வாறு பயப்படும் தலைவர்களால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் அர்த்தமில்லை. எனவே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்.

இந்த நாட்டை பழைய நிலைக்கு திரும்ப அனுமதிக்காதீர்கள். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன். இப்போது புதிய நாட்டை உருவாக்க முன்வருமாறு அனைவரையும் அழைக்கிறேன். அதற்கு கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Social Share

Leave a Reply