ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதைக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
பசில் ராஜபக்ஷ இன்று (20.09) காலை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், பொதுத் தேர்தலின் போது கட்சியின் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மீண்டும் நாட்டிற்குத் திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருந்த போதும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் காரணமாக வெளிநாடு செல்வதற்குத் தாமதம் ஏற்பட்டதாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனச் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.