மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை உடனடியாக இட மாற்றக் கோரி குறித்த மதுபான நிலையத்திற்கு முன்பாக இன்று(30.09) காலை மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த மதுபான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், மதஸ்தலங்கள் ஆகியவை அமைந்துள்ள நிலையில் மக்கள் தங்களது எதிர்ப்பை முன்னரே தெரிவித்திருந்தனர். இருப்பினும் மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளாது குறித்த மதுபான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் குறித்த மதுபான நிலையத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்ததோடு, தொடர்ந்தும் பல்வேறு எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தி வந்த போதிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பினை தெரிவித்தே மக்கள் நூற்றுக்கணக்கான மக்கள் இன்று(30.09) போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார். இருப்பினும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வருகை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பின்னர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார். இதன் போது மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று குறித்த மதுபான சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்