லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (5/12/2021) கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதில் பானுக்க ராஜபக்ச 56(31) ஓட்டங்களையும், சமித் பட்டேல் 42(31) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜெய்டென் சீலெஸ் 3 விக்கெட்களையும், வனிது ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
165 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. காலி அணி 54 ஓட்டங்களினால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் வஹாப் ரியாஸ் 27 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் சமித் பட்டேல் 3 விக்கெட்களையும், மொஹமட் ஹபீஸ், புலின தரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்டம் மோசமாக அமைந்தமை அவர்களது தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. நடப்பு சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே தோல்வியினை சந்தித்துள்ளது.
பானுக்க ராஜபக்சவின் சிறப்பான துடுப்பாட்டம் கோல் கிளாடியேற்றர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
நாளை தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் கண்டி வொரியேர்ஸ் அணிகளுக்கிடையில் மாலை 3.00 மணிக்கும், கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் இரவு 7.30 இற்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
