மன்னார் மாவட்டம் பல துறைகளிலும் அபிவிருத்தியில் பின் தங்கிக் காணப்படுவதால் இதுதொடர்பில் கவனம் செலுத்தும்படி மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்றைய தினம் (04.11) கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் , மன்னார் ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது பொது மக்களின் காணிகள் மற்றும் வயல் நிலங்களுக்கு உறுதிகள் இருக்கின்ற போதும் வன இலாகா மற்றும் தொல் பொருள் திணைக்களங்களினால் அவை அபகரிகப்பட்டு வருவதையும், மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைப்பதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எந்த அரசு ஆட்சிக்கு வருகின்றபோதும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தப்படாது இருப்பதையும் ஆயர் அவர்கள் பிரதமருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தியானது மந்த கதியிலேயே காணப்படுவதால் பிற மாவட்டங்களை நம்பியே இங்குள்ள நோயாளர்கள் காணப்படுவதாகவும் பிரதமருக்கு சுட்டிக்காட்டிய ஆயர், மன்னார் மாவட்டத்தின் பல தேவைகளையும் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியங்களையும் எடுத்துரைத்தார்.
ஆயர் மற்றும் அவருடைய குழுவினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளைக் கேட்டறிந்த பிரதமர் , அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்ததாகத் தெரியவருகின்றது.
இந்தச் சந்திப்பின் போது, மன்னார் மறைமவாட்ட குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார். குடும்ப பொது நிலையினர் பணியக இயக்குனர் அருட்பணி இ.அகஸ்ரின் புஸ்பராஜ் அடிகளார் , முன்னாள் குரு முதல்வர் ஏ.விக்ரர் சோசை அடிகளார், மூத்த அருட்பணியாளர் எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை உட்பட ஆயர் இல்லத்தின் முக்கிய அருட்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்