மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது – சோமநாதன் பிரசாத்

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது - சோமநாதன் பிரசாத்

மக்கள் மத்தியில் எமது செல்வாக்கு அதிகரித்துச் செல்கிறது, எமக்கான ஆசணம் உறுதி செய்யப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் பிரபல வர்த்தகருமான சோமநாதன் பிரசாத் தெரிவித்தார்.

பெரியகடைப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களுக்காக உண்மையாக உறுதியாக உழைத்தவர்கள் நாங்கள். எந்தவித விட்டுக்கொடுப்புக்களுமின்றி எதற்கும் விலை போகாது செயற்பட்டு வருகிறோம் 15 வருடகாலமாக நாங்கள் மக்களுக்காகப் போராடி வருவதை மக்கள் அறிவார்கள்.

நேர்மையாகவே உள்ளோம் அதற்கான பலனை நாங்கள் இந்த வருடம் பெறுவோம். மக்களின் பங்களிப்போடு நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் மக்களுக்காகப் பல விடையங்களைச் செய்துள்ளபோதிலும் அவற்றைக் காணொளியாக்கி வெளியிடவில்லை இப்போது அவ்வாறு செய்தால் மற்ற அரசியல்வாதிகளைப் போல விளம்பரத்திற்காக அதைச் செய்வது போலாகிவிடும்.

தேர்தல் முடிந்த பின்னர் அவற்றை வெளியிடுவோம். அப்போதுதான் தாங்கள் அளித்த வாக்கு பெறுமதியானதென்று மக்கள் உணர்வார்கள்.
நாங்கள் இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கவில்லை, உணவுப் பொதிகள் வழங்கவில்லை கிராமங்களுக்கு என்ன அத்தயாவசியத் தேவைகளோ அவற்றைச் செய்து கொடுக்கின்றோம்.

எங்களது சொந்தப் பணத்திலேயே, பாதைகளைச் செப்பணிட்டுள்ளோம், யானை வேலி அமைத்துள்ளோம், விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்துள்ளோம். இவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்வோம் என வாக்கு கேட்கவில்லை அவற்றைச் செய்து முடித்த பின்னரே மக்களிடம் வருகிறோம்.

எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக இருப்பது மன்னார் மக்கள் முகம் கொடுத்துவரும் கனியமண்ணகழ்வுப் பிரச்சினை இதை நாங்கள் கருத்தில் கொள்வோம். கடந்த ஆறாம் திகதி (06.11) மன்னார் மக்கள் கனியமண் அகழ்வு ஆராய்ச்சியினை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை எதிர்த்து போராடினார்கள் அந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் இருந்தேன்.

அந்த மக்கள் போராட்டத்தில் இன்னும் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் இணைந்திருந்தார்கள். அருட் தந்தையர்களின் பாரிய பங்களிப்பும் இளைஞர்களின் பங்களிப்பும் அங்கே காணப்பட்டது. அது எனக்கு மகிழ்ச்சி.

கடந்த நான்காம் திகதி(04.11) பிரதமர் மன்னாருக்கு வந்த போது கூறியிருந்தார் “இந்த கனியமண்ணகழ்வை நிறுத்துவோம் என்று”
அவர் சென்று இரண்டு தினங்களிலேயே , அதிகாரிகள் மண்ணகழ்வு தொடர்பான சுற்றுச் சூழல் ஆராய்ச்சிக்காக இங்கு வந்திருந்தனர்.

மக்களின் போராட்டம் மற்றும் மன்னார் சட்டத் தரணிகளின் கடும் எதிர்ப்பினால் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.
அந்த இடத்தில் அரசியலையும் தாண்டி எங்கள் மண்ணுக்கான போராட்டத்தில் நானும் ஒருவனாய் நின்றேன்.
தொடர்ந்தும் மக்களுக்காகப் போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கட்சியின் செயற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply