கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைகள் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சை மண்டபங்களுக்கு கண்காணிப்பாளர்கள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் உயர் தலைமை கண்காணிப்பாளர் மட்டுமே தொலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.
கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் 2,312 பரீட்சை நிலையங்களுடன் 319 தொடர்பாடல் மையங்களும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.