இனவாதத்திற்கு இனியும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி

இனவாதத்திற்கு இனியும் இடமளிக்கப்படாது - ஜனாதிபதி

இலங்கையில் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (21.11) இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை,சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளை அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலும் சமூகத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால் அனைத்து இன மக்களுக்கும் எம்மை நம்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எம்மை நம்பாமல் ஏனைய கட்சிகளை நம்பும் மக்கள் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமாக அமையாது.

பல்கட்சி முறையை பலப்படுத்துவோம்

பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்புதான் ஜனநாயகமாகும். அதேபோல் பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களர்களுக்கான அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்ய கடமையைப் பட்டிருக்கிறோம்.

தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம் அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது.

எனவே நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளிக்காமல் ,இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்

எமது நாட்டு மக்கள் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளிக்கமாட்டோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகவும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்க கூடாது என்ற பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம்.

பொருளாதாரம்,ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம்” என உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தின் கௌரவத்தை மீள ஏற்படுத்துவோம்

இந்த மக்கள் ஆணையில் மற்றுமொரு எதிர்பார்ப்பு மறைந்திருந்தது. நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட முறையற்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான நான் 24 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினேன்.

24 வருடங்களும் இந்த நாடாளுமன்றம் மக்கள் வெறுப்பை தேடிக்கொண்ட காட்சிகளை கண்ணால் கண்டிருக்கிறேன். நாடாளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததை பார்த்திருக்கிறோம். சபைக்குள்ளும் சபைக்கு வௌியில் உள்ள மக்கள் மத்தியிலும் இந்த உயர் சபை தொடர்பிலான நம்பிக்கை படிப்படியாக இல்லாமல் போனது.

உயர்வான ஒரு சபையில் இருந்துகொண்டு மக்களை புறக்கணிக்கும்,மக்கள் வெறுப்பை தூண்டும், மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறானதொரு நாடாளுமன்றம் இந்த நாட்டை ஆள்வதற்கு பொருத்தமானதாக அமையுமென நான் நம்பவில்லை.

நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பொருத்தமானது அல்ல. இனியும் மக்களின் நிதி அதிகாரத்தை கையாள்வதற்கு அந்த நாடாளுமன்றம் பொருத்தமற்றது. மக்கள் நிதியை கையாளும் அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது. மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

எனவே, தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான நாடாளுமன்றமாக இருக்க முடியாது. இந்தப் நாடாளுமன்றம் பெருமளவான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்துள்ளது. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை துரிதமாக வழங்கக் கூடிய நாடாளுமன்றம் இது.

புதிய சபாநாயகரும் பணிக்குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இந்த பாராளுமன்றத்தை மீளக்கட்டமைக்க ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கு மறைவான குகையாக இருக்கக் கூடாது.இந்தப் பாராளுமன்றத்தில் போதுமான நவீன தொழில்நுட்ப முன்னேற்த்திற்கு அமைய நாளாந்தம் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக இருக்கும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது.

மக்களுக்கு வெளிப்படையான நிலையமாக மாற்ற நாம் தொடர்ந்தும் முயன்று வருகிறோம். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாயின் நாம் பேசும் விடயம்,நடத்தை,வெளியிடும் கருத்து என அனைத்தும் மக்கள் முன்னிலையில் ஆராயப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தான் இறுதிமுடிவு என நான் யாராவது நினைப்பதாக இருந்தால் அது இறுதியானதல்ல. அடுத்த அதிகார பரிமாற்றம் வரை மற்றும் அடுத்த மக்கள் ஆணை உரசிப்பார்க்கப்படும் வரை எம்மை பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்குள்ளது.

இந்த நாடாளுமன்றம் எதிர்வரும் சில வருடங்களில் மக்களின் பரிசோதனையில் சித்தியடைந்த பாராளுமன்றமாகும் என கருதுகிறேன். அதற்கு சபாநாயகரினதும் எம்.பிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும்.

இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள்ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சில பாதகமாக எண்ணங்கள் காணப்படுகிறது.

அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பிலும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையும் தான் எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.

இந்த மக்கள் ஆணையின் போது சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கசார்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை. உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது.

அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும்.

அதனால் செயற்திறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம் .அதற்கு அரச சேவையில் இருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஜனநாயக அரசை உருவாக்குவோம்

விசேடமாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் நோக்கினால் அனைத்து பிரஜைகளுக்கும் தாம் பின்பற்றும் மதம்,மொழி மற்றும் கலாசாரத்திற்கு அமைய தனிமைப்படத் தேவையில்லை.

தாம் பின்பற்றும் மதம் தனக்கு மேலதிக அழுத்தத்தைத் கொடுப்பதாக எண்ணத் தேவையில்லை. தமது கலாசாரம் தனக்கு மேலதிக அழுத்தம் தருவாதக நினைக்கத் தேவையில்லை. தாம் ஆதரிக்கும் அரசியல் மேலதிக அழுத்தம் கொடுப்பதாக கருதத் தேவையில்லை.

அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குமிடையில் தமக்கென தனித்துவங்கள் இருக்கலாம். ஆனால் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அச்சமோ சந்தேகமோ இன்றி ஜனநாயக நாடொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

Social Share

Leave a Reply