புயல் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை

புயல் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (26.11) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்றைய தினம் மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply