2022 – 2023 களில் ஏற்பட்டது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்ற ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இங்கு மேலம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
2028 ஆம் ஆண்டளவில் கடன் மீளச்செலுத்தப்படவிருப்பதால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும் என்ற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது.
2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
எமது வௌிநாட்டு கையிருப்பை 2028 ஆம் ஆண்டளவில் 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் நாம் இருக்கிறோம். 15.1 டொலர் பில்லியன் வெளிநாட்டுக் கையிருப்பை ஈட்டிக்கொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
இப்போது நாம் 12.55 பில்லியன் டொலர்களையும் அதேபோல் செலுத்தத் தவறிய கடன் 1.7 டொலர் பில்லியன்களையும் நாம் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளோம். இந்த 12.5 பில்லியன் டொலர்களில், 11.5 பில்லியன் டொலர்கள் 2015 – 2019 வரையான அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனாகும். அன்று இந்த ஆலோசனைகளை வழங்கியிருந்தால் எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது. அதனால் ஆலோசனைகள் தாமதமாகிவிட்டன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்குவதே அதற்கான பெறுமதியாகும். மிகத் தாமதமாகி ஆலோசனை வழங்கினால் அது வலிதற்றதாகிவிடும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்து இரண்டாவது தவணைக்கும் அனுமதி பெறப்பட்டிருந்தது. நாம் அதிகாரத்தை பொறுப்பேற்கும் வேளையில் மூன்றாவது மீளாய்வு தாமதமாகியிருந்தது. செப்டம்பரில் அதனை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் தேர்தல் நடக்கின்ற வேளையில் மூன்றாவது மீளாய்வுக்கு தயாரில்லை என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது. அதன்படி, பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி நாம் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்தோம். இரண்டாவது மீளாய்வில் முன்னைய அரசாங்கத்தினால் பல அடைவுகள்,இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.
அவற்றில் ஒன்று, 2025 ஆம் ஆண்டிலிருந்து வாடகை வருமான சொத்துக்கள் மீது வாடகை வருமான வரி விதிப்பது குறித்து இரண்டாவது மீளாய்வில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. சேவை ஏற்றுமதி மீது 30 வீத கூட்டிணைத்தல் வரியொன்றை விதிப்பதற்கு இரண்டாவது மீளாய்வில் உடன்பாடு காணப்பட்டது.
அதேநேரம், ஜனவரியிலிருந்து விசேட வர்த்தக பொருட்கள் மீதான வரியை நீக்கி, பெறுமதி சேர் வரியுடன் இணைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த விசேட வர்த்தக பொருட்கள் மீதான சேவை வரியின் ஊடாக எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக வரி விதிப்பு, வரி அதிகரிப்பு, வரி குறைப்பு ஆகியவற்றை மேற்கொள்கிறோம்.
இரண்டாவது மீளாய்வு கூட்டத்தில் இந்த சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக பெறுமதி சேர் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், தனிப்பட்ட வருமானம் மீதான வரியற்ற எல்லைகளை அவ்வண்ணமே தக்க வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில், இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியையும் (Value Added Tax ) செஸ் வரியையும் நீக்குவதற்கான இணக்கமும் எட்டப்பட்டிருந்தது. எமது நாட்டு வியாபாரிகளுக்கு பெறுமதி சேர் வரியை அறவிடுவதில் கடினமான கால கட்டம் ஏற்படுகிறது. இதனால் ‘வற்’ வரியின் ஊடாக வர்த்தகர்களுக்கு அவசியமான பணப் புழக்கத்தை விரைவில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்தது. இருப்பினும் அதனை நீக்குவதற்கான யோசனையொன்று கொண்டுவரப்பட்டிருந்தது.
உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லை அதிகரிப்பு
மூன்றாவது மீளாய்வை ஆரம்பிக்கும் வேளையில் எமது நாட்டின் தொழில்வான்மையாளர் மீது விதிக்கப்பட்டிருந்த உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைக்க தீர்மானிக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம், வைத்தியர்களின் சங்கம், வங்கி முகாமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பெருமளவானோர் இந்த உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) தொடர்பில் அதிருப்தியில் இருந்தனர்.
இது தொடர்பில் நாம் கலந்துரையாடி உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை ஒரு இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சங்களாக அதிகரித்துள்ளோம். அதேபோல், நூற்றுக்கு ஆறு வீதத்திற்குள் அடங்கும் வகையில் தனிநபர் வருமான வரியின் முதல் தொகுதியை, 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையில் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்ய எம்மால் முடிந்துள்ளது. அதனால் ஒன்றரை இலட்சம் மாதச் சம்பளம் பெறுவோர் வரியிலிருந்து 100 வீதம் விடுவிக்கப்படுவர். 2 இலட்சம் சம்பளம் பெறுவோர் 71 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
இரண்டரை இலட்சம் சம்பளம் பெறுபவரின் வரி 61 சதவீதத்தினால் விடுவிக்கப்படும். 3 இலட்சம் சம்பளம் பெறுவோர் 47 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். மூன்றரை இலட்சம் சம்பளம் பெறுவோர் 25.5 வீதம் வரியிலிருந்து விடுவிக்கப்படுவர். அதனால் அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த சலுகையும், குறைந்த சம்பளம் பெறுவோர் அதிக சலுகையும் கிடைக்கும் வகையில் உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) இனை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.
யோகட் மற்றும் பால்சார் உற்பத்திகள் மீதான வெட் வரி நீக்கம்
எமது பிள்ளைகளின் போஷாக்கு குறைப்பாடு தொடர்பிலான பிரச்சினை குறித்து சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் போன்ற உற்பத்திகளுக்கு வற் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதனால் மூன்றாவது மீளாய்வில் எமது நாட்டில் உற்பத்திச் செய்யப்படும் பால் சார் உற்பத்திகளின் மீதான பெறுமதி சேர் வரியை குறைக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம்.
கடந்த அரசாங்கம் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தில் 30 சதவீத ஏற்றுமதிச் சேவை வரி யை 15 சதவீதமாக குறைப்பதற்கான இணக்கம் காணப்பட்டது. சேவை ஏற்றுமதிக்கு 15 சதவீத வரியென்பது சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையாகும். அந்த அளவில் வரியை குறைத்துக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது.
அதேபோல் தடுத்துவைக்கும் வரி (Withholding Tax) இனை ஐந்து சதவீத்திலிருந்து பத்து சதவீதமாக அதிகரித்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது. முதியவர்கள், ஓய்வூதியம் பொறுவோர், ஒரு தொகை பணத்தை வைப்பிலிட்டு அந்த வட்டியில் வாழ்கிறார்கள். அவ்வாறானவர்கள் மாதம் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வரியை பெற்றால் மட்டுமே அவர்கள் வரி விதிப்புக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
அதனால் இறைவரித் திணைக்களத்துக்குள் எந்தவொரு பிரஜையும் தான் குறித்ததொரு வரிக்கு உரித்தானவர் அல்லவென நினைக்கும் பட்சத்தில், அவர்கள் உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்குச் சென்று தமது வரி தொடர்பில் தகவல்களை வழங்கி வரி விதிப்பை தவிர்த்துகொள்ள முடியும்.
அதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தனியான பிரிவொன்று உருவாக்கப்படும். தமது வரி நிலைமை குறித்து தெளிவு பெற முடியும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாதாந்தம் பணத்தை வைப்பில் வைத்து வருமானம் பெறுவோருக்கு நிவாரணம்வழங்குவதே இதன் நோக்கமாகும்.
அவ்வாறானவர்களுக்கு விரைவான ஆலோசனைகளை வழங்குவதற்கான நிலையங்களை கொழும்பிலுள்ள தலைமையகத்திலும், நாடளாவிய ரீதியிலுள்ள அலுவலகங்களிலும் ஸ்தாபிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளியோம்.
அதனால் எமது வரி வலையை விஸ்தரிப்பதற்கான நோக்கமே அன்றி, குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மேலதிக வரியினையினை விதிப்பதற்கான தேவை ஏற்படாது.
வாகனச் சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விடுவது குறித்து கவனம்
வாகனச் சந்தையை கட்டம் கட்டமாக திறந்து விட வேண்டும். ஏனென்றால் அதனுடன் இணைந்த தொழிற்துறையொன்றுள்ளது. அதனுடன் தொடர்புள்ள தொழில்முனைவோர் உள்ளனர். நீண்ட காலத்திற்கு வாகன சந்தையை தடுத்து வைக்க முடியாது. அதனால் 3 கட்டங்களில் இந்த வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம். பயணிகள் போக்குவரத்து பஸ் மற்றும் விசேட தேவைகளுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என்பவற்றை கடந்த 14 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு ஏற்ற வகையில் திறந்து விட்டுள்ளோம். எதிர்வரும் பெப்ரவரி தொடக்கம் தனியார் வாகன இறக்குமதி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.
இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படும் என யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மத்திய வங்கியுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தி இந்த வாகன இறக்குமதியினால் வெளிச்செல்லும் டொலரின் தொகை தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். அது எந்தளவிற்கு எமது பொருளாதாரத்திற்கு தாங்கக் கூடியதாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்தை மீளமைக்க வேண்டுமானால் இந்த வாகன சந்தையை திறந்து விட வேண்டும். அதனால் கடுமையான நிலைப்பாட்டில் இருந்து இந்த வாகன சந்தையை திறந்து விடுகிறோம். ஏனென்றால் இது முக்கியமானது என நாம் கருதுகிறோம்.
பராட்டே சட்டம் சலுகை நீடிப்பு
பராட்டே சட்டம் 2024 டிசம்பர் 15 ஆம் திகதி முதல் முடிவுக்கு வருகிறது. ஆனால், சிறு மற்றும் மத்திய தர தொழில்முனைவோர் இன்னும் வழமை நிலைக்குத் திரும்பவில்லை. எனவே அவர்களுக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும்.
அதில் 99 வீதமானவர்கள் 25 மில்லியனை விட குறைவாக கடனை பெற்றவர்களாவர்.
அதனால் பராட்டே சட்டம் முழுமையாக இடைநிறுத்தப்பட்டிருப்பதால் வங்கிக் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவர்களிடம் இருப்பதும் மக்களின் வைப்புப் பணமாகும். அது தவிர வேறு வழியில் வங்கிக் கட்டமைப்புக்கு நிதி கிடைப்பதில்லை. எனவே மக்களின் வங்கிக் கட்டமைப்பிலுள்ள நிதியின் பாதுகாப்பு தொடர்பிலும் உத்தரவாதம் வழங்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் பல நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தன. அதன் பாதிப்பு பணிப்பாளர் சபையினரையோ வங்கித்துறையினரையோ சென்றடையவில்லை. வைப்பாளர்கள் தான் அதன் பாதிப்பை அனுபவித்தனர். பாரியளவில் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்ததில் வைப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் ஈடிஜ போன்றவற்றில் பணம் வைப்புச் செய்தோர் பெரும் வேதனையுடன் உள்ளனர். இவ்வாறு பல நிதி நிறுவனஙகள் வீழ்ச்சியடைந்ததால் வைப்பாளர்களும் பொதுமக்களும் தான் பாதிக்கப்பட்டனர்.அதனால் நாம் வங்கிக் கட்டமைப்பை பாதுகாப்பது மற்றும் சிறு மத்திய தொழில்முனைவோரை பாதுகாப்பது ஆகிய இரண்டையும் சமமாக கருத்திற் கொள்ள வேண்டும். அதன் படி பராட்டே சட்டத்தை 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை சுமார் மூன்றரை மாதங்கள் நீடிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.
வங்கி மற்றும் கடன் பெற்றோர் இடையில் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள டிசம்பர் 31 வரை காலஅவகாசம் வழங்குவோம். அதில் செலுத்த வேண்டிய வட்டி தவிர கடன் தொகை 25 மில்லியனுக்குக் குறைவான கடனை மறுசீரமைக்க 2025 டிசம்பர் 15 வரை கால அவகாசம் வழங்குவதற்கு நாம் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இந்த மறுசீரமைப்பிற்கு அவர்கள் தயாரா என்பது தொடர்பில் மார்ச் 31 ஆம் திகதி வங்கிகளுக்கு அறிவிக்க முடியும். வங்கிகளும் கடன் பெற்றோரும் கலந்துரையாடி முடிவு எடுக்க 31 ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. தான் செலுத்த வேண்டிய கடன் தொடர்பில் மறுசீரமைப்பு திட்டமொன்றைத் தயாரிக்க முடியும். 99 வீதமான தொழில்முனைவோருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
செலுத்த வேண்டிய வட்டி மற்றும் கடன் தொகை 25 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டியோர் மார்ச் 31 ஆம் திகதி மறுசீரமப்புத் திட்டத்திற்கான தமது விருப்பத்தை வங்கிகளுக்கு முன்வைக்க முடியும். புதிய மறுசீரமைப்பிற்கு 2025.09.15 ஆம் திகதி வரை மூன்று மாத கால அவகாசம் வழங்குவோம். வங்கிக்கும் கடன் பெற்றோருக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றி கலந்துரையாட 9 மாத காலம் உள்ளது.
செலுத்த வேண்டிய கடன் தொகை தவிர 50 மில்லியனுக்கு மேற்பட்ட கடன் பெற்றோரின் கடன் மறுசீரபைப்பிற்கு 2025.06.15 வரை 6 மாத கால அவகாசம் வழங்குகிறோம். அவர்களும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான உடன்பாட்டை வங்கிக்கு அறிவிக்க வேண்டும். வங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னர் மறுசீரமைப்புத் திட்ட உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
அதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பாதுகாப்பையும் வங்கிகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே இந்தத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம்.
இந்தப் பொருளாதார நெருக்கடி நிலையில் எமது பொருளாதாரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை. அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர். அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்க எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்னர் இந்தப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய சில சட்டங்கள் உள்ளன. ஏப்ரல் மாதத்தில் இருந்து செயற்படுத்துவதாக இருந்தால் அதற்கு முன்னர் அதனைச் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.
அதனால் சிலவற்றை நாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். மேலதிகமாக நான் இந்த விடயத்தை முன்வைக்கிறேன். சிலவற்றுக்கு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சிலவற்றுக்கு அவசியமில்லை.அவை ஏற்கெனவே செயற்படுத்தப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவை ஒக்டோபர் மாதம் முதல் 3000 ரூபாவினால் அதிகரித்தோம்.
விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு 25 ஆயிரம் ரூபா வரை பசளை நிவாரணத்தை அதிகரித்தோம்.சில இடங்களில் இந்த பணம் கிடைப்பதில் தாமதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நிதி அமைச்சுடன் பேசி எந்தத் தாமதமும் இன்றி அந்த நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க திட்டம் தயாரித்துள்ளோம். இது தவிர விவசாயிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
கஷ்டநிலையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவு
பொருளாதார நெருக்கடியினால் பாரிய தாக்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிலர் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலதிக புத்தகங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர்.தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். இது எந்த வகையிலும் உகந்த நிலைமையல்ல.
வரவு செலவுத்திட்டத்தில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உள்ளதோடு இந்த வருட இறுதிக்குள் அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கு 6000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அஸ்வெசும பயனாளர்கள் தெரிவு செய்கையில் சரியாக தெரிவு நடந்ததா என்ற கேள்வி கிராமங்களில் எழுப்பப்படுகிறது. அஸ்வெசும பெற தெரிவு செய்யப்படவோ பிள்ளைக்கு பாடசாலைக் கல்விக்கான கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்படவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் அஸ்வெசும திட்டத்திற்கு உள்வாங்கப்படாத ஆனால் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய பிள்ளைகளை தெரிவு செய்து அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த 6000ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அடுத்து விசேடமாக அஸ்வெசும 4 கட்டங்களாக செயற்படுத்தப்பட்டன. அதிலுள்ள 8 இலட்சம் பேர் டிசம்பர் 31 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்தில் இருந்து அகற்றப்பட இருந்தனர். அந்த 8 இலட்சம் பேருக்கும் நிவாரணம் வழங்குவதை மார்ச் 31 வரை 3 மாதத்தினால் நீடித்துள்ளோம். இரண்டாவது குழுவை 2025 டிசமர்பர் 31 வரை ஒருவருடத்தினால் நீடித்துள்ளோம். அதே போன்று அஸ்வெசும பெறுவோருக்கும் பெறாதோருக்கும் இடையில் கிராமங்களில் பிரச்சினை உள்ளது. இதனை மீளமைக்க வேண்டும். பழைய கட்டமைப்பின் கீழ் தான் முன்னர் மீளமைப்பு நடந்தது. அது வெற்றிகரமாக நடந்ததா என்பதை கிராமங்களில் உள்ளோர் அனுபவிக்கின்றனர்.
அந்தக் கட்டமைப்பின் ஊடாகப் பெறும் தகவல்கள், கிராம உத்தியோகஸ்தரும் சமுர்த்தி உத்தியோகஸ்தரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தரும் சிலவேளை சமூக சேவை உத்தியோகஸ்தரின் ஒத்துழைப்புடன் மீள ஆராய்ந்து தற்பொழுது அஸ்வெசும கிடைக்காத ஆனால் நிவாரணம் கிடைக்க வேண்டியவர்களை மீண்டும் தெரிவு செய்து அடுத்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு அஸ்வெசும வழங்க நடவடிக்கை எடுப்போம்.
அதே போன்று வங்கியூடாகத்தான் அஸ்வெசும வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொதுவாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. 67 ஆயிரம் குடும்பங்கள் இதில் அடங்கும். அஸ்வெசும் பெற தகுதி பெற்றும் ஆனால் அந்தப் பயனைப்பெற வங்கிக் கணக்குக் கணக்கு ஆரம்பிக்க அடையாள அட்டையோ அடையாள அட்டை பெற பிறப்புச்சான்றிதழோ பெற முடியாத நிலையை அந்தக் குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளன. ஆட்சியாளர்கள் மிக நெருக்கமாக அவதானித்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் அல்லவா இவை. ஆனால் ஒன்றரை வருடங்களாக கருத்திற் கொள்ளாமல் விட்டனர்.மத்திய வங்கியுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க அவகாசம் வழங்க நாம் முடிவு செய்துள்ளோம்.
அதனால் அந்த அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் அந்த பயனை வழங்க நடவடிக்கை எடுப்போம். சில விடயங்களை வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். சிலவற்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். மார்ச் 21 ஆம் திகதியளவில் வரவு செலவுத்திட்ட விவாதம் நிறைவடைய இருக்கிறது. அதன் பின்னர் சட்டத்தை நிறைவேற்ற முயன்றால் இதனை ஏப்ரல் மாதம் வழங்க முடியாது போகும்.இந்தப் பயன்களை துரிதமாக வழங்கும் வகையில் இவற்றை விரைவாக வர்த்தமானியில் வெளியிட்டு அடுத்த ஜனவரியில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் ‘வற்’ வரி திருத்தப்பட வேண்டும். அஸ்வெசும சட்டத்தில் பல திருத்தங்கள் உள்ளன. இந்தத் திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.