உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளன.
இந்நிலையில் எவ்வித அச்சமும் இன்றி நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கிறிஸ்த்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த மத ஸ்தலங்களிலும் தேவாலயங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.