
நாட்டில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். நேற்றைய தினம் மன்னாரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 05 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருப்பது பாரதூரமான நிலைமை என்பதை நான் முதலில் சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் உயிரிழந்து, மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டின் சிவில் பிரஜைகள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்கள புள்ளிவிபரங்களின் படி, வெளிநாடு சென்றுள்ளவர்களில் 188 பேருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 63 பேர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் கொலை, கப்பம், மிரட்டல் போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு நாட்டின் குடிமக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவது எந்த ஒரு அரசாங்கத்தின் முதன்மைப் பணியாகும். இது பாதுகாப்பு சார்ந்ததாக இருக்கலாம், மனித உரிமைகளைப் பாதுகாப்பது சார்ந்ததாக இருக்கலாம், சுகாதாரத்துறை சார்ந்ததாக இருக்கலாம், உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்தனவாக இருக்கலாம், இந்தப் பொறுப்பை எல்லா வகையிலும் நிறைவேற்றுவது அந்தத் தருணத்தில் இருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் அரசாங்கத்தின் பணியாகும்.
மன்னார் நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நேற்று (16.01) இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில், இவ்வாறான பரிதாபகரமான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான், ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துக்கும் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைப் பிரதானிகளிடமும் தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிலை அதிகரிக்குமானால், அது சாதாரண மக்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கும், மக்களுக்கு சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் தடங்களான காரணமாக இருக்கும் என்பது எனது கருத்தாகும். எனவே, இந்த பாதாள உலக செயற்பாடுகளை உடனடியாக ஒழிப்பதற்கும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவற்றை வழிநடத்தும் நபர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் எதிர்க்கட்சிக்கு தலைமை வகிக்கும் நபர் என்ற வகையில் நானும், எனது எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழுவும் இதற்குத் தேவையான ஆதரவை வழங்க தயாராக இருக்குகிறோம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.