மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே
நேற்று (02.02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால், அதிக வருமானம் ஈட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, டொலர் வருவாயை அதிகரிக்கும் முக்கியமான அம்சமாக இது விளங்குவதால், சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்ப்பதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், மிரிஸ்ஸ மீனவ துறைமுகத்தினூடாக அதிக மீனவ படகுகள் செயற்படுவதனால், அங்கு நிலவும் சிக்கல்கள் குறித்தும் மீனவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்கம் இல்யாஸ், அமைச்சின் மாத்தறை மாவட்ட இணைப்பாளர் யூ. கே. சமரநாயக்க, கபில பமுனு ஆரச்சி உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.