நீதி அமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் அமைச்சராக பதவி வகிப்பதைக் குறித்து சங்கடப்படுகிறார் எனவும் இராஜினாமா செய்ய முயன்றும் முடியாமலிருக்கிறார் என ஊடகங்கள் கூறிவருவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று (09/12) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது பற்றி அவர் தொடர்ந்தும் கூறுகையில், நீதியமைச்சர் இராஜினாமா செய்ய முடியாமை மிகவும் விசித்திரமாக இருந்தாலும், அமைச்சருக்கு தன் பதவி குறித்திருக்கும் சங்கடம் தன்னால் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதென்றும், ஏனெனில் அரசாங்கம் நாட்டின் நீதித் துறையின் செயற்பாடுகளில் வெட்கமின்றி தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இன்று கடற்படை தளபதி வசந்த கரன்னகொட வடமேல் மாகாணத்தின் ஆளுநனராக நியமிக்கப்படப் போகிறார் என்று வெளிவந்த செய்தியானது, இவர் இலங்கையின் ஒர் அடையாள வழக்கான கப்பங்கேட்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டவர். ஆனால் இவருக்கெதிரான குற்றப்பத்திரிக்கையை சட்டமா அதிபர் காரணமின்றி மீள பெற்றுக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது இவ்வழக்குத் தொடர்பில் சிறிதளவேனும் முன்னேற்றம் காட்டப்பட்டது. ஆனால் தற்போது அவை கூட பின்வாங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சார்பாகவிருக்கும் பலருக்கு எதிராக பதியப்பட்ட குற்றப்பத்திரிகைகளை பதவிக்கு வந்தவுடனேயே சட்டமா அதிபர் அவசர அவசரமாக மீள கைவாங்கி வருகிறார்.
சட்டமா அதிபரானவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டாலும் சுதந்திரமாக செயற்படவேண்டியவர். எமது அரசியலமைப்பை ஒத்த நாடுகளான பிரித்தானியா மற்றும் இந்தியாவில் அரசியல் நியமனம் பெற்றவராக இருந்தாலும் சட்டமா அதிபர்கள் சுதந்திரமாகவே செயற்படுகின்றனர். ஆனால் இங்கு மட்டும் இது எதிர்மாறாகவே உள்ளது என, எம்.ஏ சுமந்திரன் எம்.பி சபையில் சாடினார்.
