
மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வருகைத்தந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களின் எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.
கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தன.
இதன் போது மாவட்டச் செயலகப் பகுதியில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்றடிப்படையில் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.
இதன் போது அப் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
இந்த நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று செவ்வாய் மற்றும் இன்று புதன் பாராளுமன்றத்தில் குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராகப் பேசி குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உடனடியாக இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த கணிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் உடனடியாக நிறுத்தப்பட்டு,வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதன் போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், உள்ளடங்களாக கிராம மக்கள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்