கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் கடற்றொழில்துறைக்கும், கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் ஐ நா மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவைப்பாடும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உதவிகள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைத்தார்.
இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றை தீர்ப்பதற்கு தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டு நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த அமைச்சர், ஐநாவின் ஒத்துழைப்புகள் வழங்கக்கூடியதாக இருந்தால் அதனை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்று அண்மையில் தாம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அமைச்சரிடம் தெரிவித்த ஐ.நா. பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின் முனசிங்க, உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கடற்றொழில்சார் நிபுணர் பாலித கித்சிறி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.