இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளித்துள்ளது.

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று ஆராய்ந்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது.

இந்தநிலையில், சமூக செலவினங்களுக்கான இலக்கைத் தவிர, ஏனைய அனைத்து இலக்குகளிலும் அளவு மட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன. பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
பணவீக்கம் குறைவாகவே உள்ளதுடன் வருவாய் அதிகரித்து வருகிறது.

பொருளாதார மீட்சி 2025ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாக இருப்பதால், பேரிணப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் சீர்திருத்த உந்துதலைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply