உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சர்ச்சை – ஜனாதிபதி விளக்கம்

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை (19.04) இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது என்பதையே தான் கூறியதாக அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற கொள்கையைப் பின்பற்றாமல் நிதியை தவறாகப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது என்றே நான் கூறினேன்” என ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

மக்களின் பணம் பிரதேச சபைகளுக்கோ அல்லது நகர சபைகளுக்கோ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக ஒப்படைக்கப்படாது என்பதை தனது அறிக்கை தெளிவாகக் கூறுவதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை உடனடியாக அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.

இருப்பினும், ஏனைய கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்கும் இதனைச் செய்ய முடியாது, ஏனெனில் அவை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. முழுமையான பரிசீலனை தேவை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து இது தொடர்பில் ஜனாதிபதி தெளிவுப்படுத்தப்படுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply