நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமானவை எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு ஆகிய முப்பகுதிகளின் சங்கநாயக்கர் பதவியைப் பெற்ற வணக்கத்துக்குரிய கங்கோடகம விமலரத்ன நாயக்க தேரருக்கு, அதற்கான ‘சன்னஸ்பத்ர’ பதவிப் பிரமாணப் பாத்திரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கடந்த (01.03) புத்தல கலாசார மத்திய நிலையத்தில் இதனைத் தெரிவித்தார்.
ஊவா அமரபுர மகா நிகாயவின் புதிய நாயக்க தேரருக்கு, அதற்கான ‘சன்னஸ்பத்ர’ ஆவணத்தைப் பிரதமர் கையளித்த அதேநேரம், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர ‘விஜினிப்பத்த’ (விசிறி) கௌரவச் சின்னத்தை வழங்கிவைத்தார்.
புதிய சங்கநாயக்கர் பதவி பெற்ற நாயக்க தேரருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றிய பிரதமர்,
ஊவா மாகாணம் என்பது எமது நாட்டிற்கு மதரீதியிலான பாரிய பணிகளை ஆற்றிய பௌத்த துறவியல் பரம்பரையொன்று உருவான மாகாணமாகும். எமது நாயக்க தேரரும் அந்தப் பாதையில் பயணித்து, தனது 60 வருடங்களுக்கும் மேலான துறவற வாழ்க்கையில் தர்மத்தின் ஊடாக மாத்திரமன்றி, மருத்துவ சாஸ்திர அறிவின் மூலமும் இப்பிரதேச மக்களுக்கும் மாகாணத்திற்கும் பாரிய சேவையாற்றியுள்ளார்.
உதவி ஆசிரியர், பிரிவெனாதிபதி மற்றும் அதிபர் என இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றி, தனது அறிவின் மூலம் எமது நாட்டுப் பிள்ளைகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்பதை நாம் அறிவோம்.
குறிப்பாக, இப்பிரதேசத்தின் கல்வி கற்றலை ஊக்குவிக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு 6ஆம் தரம் முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தேவையான நிதி உதவிகளை வழங்குவதோடு, ஏனைய வசதிகளைச் செய்துகொடுத்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு எந்நேரமும் கைகொடுத்தமை, பிரதேசப் பிள்ளைகளின் தர்ம அறிவை மேம்படுத்துவதற்காகத் தர்ம பாடசாலைகளை ஆரம்பித்தமை என நாயக்க தேரரின் வழிகாட்டலிலும் அர்ப்பணிப்பிலும் முன்னெடுக்கப்பட்ட சமூகப் பணிகளை இவ்வேளையில் நினைவுகூர வேண்டும்.
புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இந்நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லப் பாரிய பணிகளைச் செய்து வருகின்றோம். அந்தப் புதிய யுகத்தில், உங்களைப் போன்று மக்களுக்காகப் பரந்த சமூகப் பணியை ஆற்றி வரும் மதத் தலைவர்களின் வழிகாட்டலும் ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளியின் தாக்கம் ஊவா மாகாணத்திற்கு, குறிப்பாகப் பதுளை மாவட்டத்திற்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது நாம் அந்தத் துயரங்களிலிருந்து படிப்படியாக மீண்டு, வலுவாக எழுந்து நிற்கும் ஒரு காலப்பகுதியில் இருக்கின்றோம். அந்த அனர்த்தத்தினால் தமக்கு நெருக்கமானவர்களின் உயிர்களை இழக்க நேர்ந்ததின் வலிகளையும் தாங்கிக்கொண்டு, மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் ஊவா, வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பக்கபலமாக இருப்பதற்கு, புதிதாக சங்கநாயக்கர் பதவியைப் பெற்றுக்கொண்ட உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன்,என தெரிவித்தார்
இந்நிகழ்வில் அமரபுர மகா நிகாயவின் ஊவா பிரிவின் அநுநாயக்கரும், பதுளை மைலகஸ்தென்ன போதிருக்காராமாதிபதி வணக்கத்துக்குரிய வதுபிட்டியே ஞானானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தல பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக
பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.