கடற்றொழில் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களங்களுக்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து!

மீனவ சமூகத்திற்கு மிகவும் வினைத்திறனான மற்றும் துரித சேவையை வழங்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் தரவு முறைமை (MSDFAR) மற்றும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைத் தரவு முறைமை (DRP) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (03.03) ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடைபெற்றது.

2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், படகு பதிவு, கடற்றொழில் அனுமதிப்பத்திரம் வழங்கல், மீனவர் மற்றும் படகு ஓட்டுநர் அடையாள அட்டை வழங்கல், படகு புறப்படுதல், செய்மதித் தொழில்நுட்பம் ஊடாகப் படகுகளைக் கண்காணித்தல் (VMS), மீன் அறுவடைத் தரவுகளைச் சேகரித்தல் மற்றும் இணையவழி (Online) கொடுப்பனவு முறைமைகள் உள்ளிட்ட பல சேவைகள் இணையவழி முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தத் தரவு முறைமையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட நாட்டின் 37 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல் கட்டமைப்புகளில் (Critical National Information Infrastructure) 11 வது கட்டமைப்பாகக் கடற்றொழில் திணைக்களத்தின் MSDFAR முறைமை பெயரிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இவ்வருடத்தில் பலநாள் மீன்பிடிக் கலன்களுக்கு மேலதிகமாக ஏனைய மீன்பிடிப் படகுகளுக்கும் இந்த டிஜிட்டல் முறைமைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்களை முறைமைக்குள் உள்வாங்கும் போது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதே இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாகத் தரவுப் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்பப் பணிகள் எதிர்காலத்தில் இரு திணைக்களங்களினதும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும். இந்த ஒருங்கிணைப்பின் ஊடாகக் கடற்றொழில் திணைக்களத்தின் இணையவழி சேவைகளை விரிவுபடுத்தவும், விசேடமாக கடற்றொழில் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ‘ஒரு நாள் சேவையை’ (One-Day Service) ஆரம்பிப்பதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் இதன்மூலம் ஏற்படுத்தப்படும்.

இந்நிகழ்வில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி எம்.எஸ்.பி. சூரியப்பெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.ஜே. கஹவத்த, ஆட்பதிவுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி கே.எச்.ஜே.எல். சேனாத்ன, ஆணையாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) திருமதி லக்மாலி ஜயசிங்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்) திரு. நுவன் குணவர்தன உள்ளிட்ட இரு நிறுவனங்களினதும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply