ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விநியோகம் சீராகும் – அமைச்சர் விஜித உறுதி!

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட தடைகளைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று (05.04) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கு போரின் தொடக்கத்திற்குப் பிறகு உருவான எரிசக்தி நெருக்கடியை அரசு ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

மேலும், எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை, ஒற்றை–இரட்டை எண் முறை (odd-even), மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை போன்ற நடவடிக்கைகள் குறுகிய கால தீர்வுகளாக அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளதுடன், QR முறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், விநியோக நிலைமை மேம்பட்டால் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் நுகர்வை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறையும் நிலைமை வழக்கத்திற்கு திரும்பிய பின் நீக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பதற்றமடைய தேவையில்லை எனவும், ஏப்ரல் மாதத்தில் வரவுள்ள 9 எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply