சாத்தான்குள சம்பவம் – 9 பொலிசாருக்கு மரண தண்டணை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் திகதி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை நடத்தியதாக சாத்தான்குளம் போலீசார் கைது செய்திருந்தனர்.

அங்கு நடைபெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் இருவரையும் கொடூரமாக தாக்கி, இருவரின் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
பொலிசார் தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் ஜூன் மாதம் 23ம் தேதி சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா. செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முத்துக்குமரன் நேற்று
(06.04) அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிபதியின் தீர்ப்பில், இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை- மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது. இது அரிதினும் அரிதான வழக்கு. கைது செய்யப்பட்ட போலீசாரால் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது. வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இருக்காது. என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு தமிழக பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply