இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தலைமையிலான 26 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற அதிகாரிகள் குழு, இந்தியாவின் புதுடில்லியில் உள்ள லோக் சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (PRIDE) ஏற்பாடு செய்யப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்காக 2026 ஆகஸ்ட் 24 முதல் 28ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டது.
இத்திட்டத்தின் பிரதான நோக்கம், இலங்கை மற்றும் இந்திய பாராளுமன்றங்களுக்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்திய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு விரிவான அறிவையும் அனுபவத்தையும் வழங்குவதாகும்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இத்திறன் மேம்பாட்டுத் திட்டம், வரவேற்பு மற்றும் அறிமுக அமர்வுடன் ஆரம்பமானது. இதன்போது, லோக் சபா செயலகத்தின் நிறுவனக் கட்டமைப்பு, நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, உறுப்பினர்களுக்கான சேவைகள், உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரி பிரிவுகளின் பணிகள் தொடர்பில் அதிகாரிகள் அறிந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள் தொடர்பான அமர்வுகளும் இடம்பெற்றன.
நிர்வாகத்தின் மீது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் செயற்பாடுகள், குழுச் செயலகங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகம், சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறை நடைமுறைகள், அத்துடன் இந்திய பாராளுமன்றத்தின் துறைசார் நிலைக்குழுக்கள் (DRSCs) தொடர்பிலும் இத்திட்டத்தின் போது விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், பாராளுமன்றங்களில் தலைமை வகிக்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள், செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் நிர்வகித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) செயற்பாடுகள் மற்றும் வரவு–செலவு மற்றும் பாராளுமன்றப் பிரிவுகளின் (B&P) பணிகள் தொடர்பிலும் அதிகாரிகள் அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற நூலகக் கட்டடம் மற்றும் பாராளுமன்றக் கட்டடத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது லோக் சபா மற்றும் ராஜ்ய சபா சபைகளின் அமர்வு மண்டபங்கள் மற்றும் சம்விதான் சதனின் மத்திய மண்டபம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அத்துடன், அதிகாரிகள் ஆக்ராவுக்கு விஜயம் செய்து தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டனர். புதுடில்லியில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் சுற்றுலா நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கிடையிலான கலாசாரப் புரிந்துணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு வாய்ப்பளித்தன.
இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறை விஜயத்தின்போது அறிவித்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பின் கீழ் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இத்திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இரு வலுவான ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதுடன், பாராளுமன்ற ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாடுகளினதும் நிறுவன அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.