மக்கள் பணத்தில் ஐந்து சதம் கூட சீனாவுக்கு கொடுக்க கூடாது என்றும் தவறு செய்பவர்களிடமிருந்து அந்தப் பணத்தை வசூலிக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நேற்று (15/12) கட்சித் தலைமையகத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாதென வலியுறுத்திய அவர், நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்துவது பொருத்தமற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நிபுணர்கள் என எவரேனும் சீனா சென்று விடயங்களை ஆராய்ந்த பின்னரே உரத்தை நாட்டிற்கு கொண்டுவர தீர்மானித்திருப்பார்கள். ஆகையால் அவ்வாறு சென்று ஆராய்ந்தவர்கள் குறித்து விசாரித்து அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கூறினார்.