தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது பொய்யான செய்தி எனவும் அவ்வாறான எந்த பேச்சுகளும் இடம்பெறவில்லை எனவும் விமீடியாவுக்கு இரா.சம்பந்தனின் செயலாளர் உறுதி செய்திருந்தார். .
இந்த நிலையில் குறித்த போலி செய்தி அல்லது பிரச்சாரம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முழுமையான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் “தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் வரை தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை. ஓய்வு பெறுவதற்காகவே, வசதிகளை அனுபவிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு முடிவுக் காணக்கூடிய அரசியல் தீர்வொன்றை காணுவதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து விடைபெறப்போவதில்லை என அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முகநூல்களிலும்; சமூக வலைத்தளங்களிலும், ஏனையவை வதந்திகளாகவும் இரா.சம்பந்தன் பதவிவிலகப் போகின்றார் அவர் பதவி விலகி இன்னொருவருக்கு இடமளிக்கவேண்டும் என்ற செய்திகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் இதுபற்றி அவரிடம் நேரடியாக வினாவிய போது மேற்கண்டவாறு இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் நீண்ட நாட்களாக கோரி வந்தபோதும், அந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாது இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காலம் கடத்துகின்ற போக்குமே காணப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்கால சுபீட்சமும், அமைதியும், சுயநிர்ணயமும் கருதி தீர்வை பெறும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெறும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.
நான் அரசியலுக்கு வந்தததன் காரணம் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு, நிரந்தரமான நிட்சயமான தீர்வை பெற வேண்டும் என்பதும், கடந்த 50 வருடங்களாக நான் போராடி வந்திருக்கின்றேன். தந்தை செல்வா என்னை அரசியலுக்கு வரும்படி அழைத்தபோது நான் மூன்று முறை மறுத்தததன் பின்பே அரசியலுக்குள் வந்தேன். என்னுடைய வருகை வெறும் அரசியல் மயப்பட்டதாக அனுகூலங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்த ஒரு பயணம் அல்ல.
நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தரமான பலமிக்க தீர்வொன்றை பெற்றுத் தரவேண்டும் என்ற கடந்த 4 தசாப்தத்துக்கும் மேலாக இலங்கை அரசாங்கத்துடன் போராடி வந்திருக்கின்றேன்.
அதே போன்று சர்வதேச நாடுகள், சர்வதேச தலைவர்கள் மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றேன். என்னுடைய பயணம் இன்னும் முடிவுறவில்லை. எப்பொழுது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ளுகிறோமோ அன்று நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான ஒரு நிலை உருவாகலாம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் என்னுடைய பிரதேசத்து மக்களும் அமைதியாகவும், நிம்மதியாகவும் சுயநிர்ணயப் பலத்துடன் வாழவேண்டும் என்ற கனவோடுதான் நான் அரசியலுக்கு வந்தவன். எனவே, என்னுடைய இலக்கு, நோக்கம், எதிர்பார்ப்பு, இலட்சியம் என்பன நிறைவேற்றப்படும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவன் நான் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்றைய அரசாங்கத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படுவதற்கான சாதக நிலையொன்று காணப்படுவதாக கூறப்பட்டபோதும் அது பற்றி முயற்சிகளும், முன்னெடுப்புக்களும் தெளிவாக இல்லை என்பதை உலகம் நன்கு அறியும். உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நானும் எனது கட்சியும் மிகத் தீவிரமாகவும், அக்கறையுடனும் செயற்பட்டு வருகின்றோம் என்பதை மிகத் தெளிவாக சகலருக்கும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது கூட்டமைப்பின் இந்திய பயணம் தொடர்பாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு நோக்கம் கருதியும் அந்த பயணம் இடைநிறுத்தப்படவில்லை. முன்னாயத்தமற்ற ஒரு சூழ்நிலையில் அப்பயணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாக செல்ல முடியாது போய்விட்டது மாத்திரமின்றி சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கூட்டமைப்பினுடைய ஒரு சில தலைவர்கள் அப் பயணத்தில் பங்குகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்தும் இந்திய தலைவர்களுடன் தொடர்பில் நாம் இருந்துகொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இந்திய அழைப்பை ஏற்று, அங்கு சென்று தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாகவும், இன்றைய அரசாங்கத்தினுடைய போக்கு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாட இருக்கின்றோம். எங்களுடைய இந்திய பயணம் மிகச்சிறந்தவொரு வாய்ப்பாக அமையும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே, அர்த்தமற்ற விமர்சனங்களும், வதந்திகளும் எம்முடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரப்போவதில்லை. எந்த மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டவர்களாக என்னை தேர்த்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்களோ அந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வீணாடிக்கும் வகையில் நான் செயற்பட போவதுமில்லை. ஓய்வு பெறப்போவதில்லை என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே, நான் அரசியல் தீர்வொன்றை நோக்கி எமது பயணம் நீண்டு செல்வதாக இருந்தாலும் அந்த இலக்கை அடையும் வரை பயணித்துக் கொண்டிருப்பேன் ஓயப் போவதில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(திருகோணமலை சிறப்பு செய்தியாளர்)
தொடர்புடைய செய்தி