பட்டமளிப்பு விழா – ‘மாணவர்களின் நடத்தை நாகரிகமானது’

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சில மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று (22/12) தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தைப் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதுபற்றி தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மாணவர்கள் தமதும், இலங்கை மக்களதும் ஜனநாயக உரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர். துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவர்கள் இந்த ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டினர்.

மௌனமான அதேசமயம் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர். அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றி பெற்ற நாளாகப் பதிவாகியுள்ளது.

மாணவர்கள் தங்களின் விருப்பப்படி நடந்து கொண்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

எனது கருத்தின் படி அன்றைய தினம் தான் நாட்டின் ஜனநாயகம் வென்றதாக நான் நினைக்கிறேன்.இளைஞர்கள், யுவதிகள் மிகவும் ஜனநாயகமாக நடந்து கொண்டனர்” எனத் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா - ‘மாணவர்களின் நடத்தை  நாகரிகமானது'

Social Share

Leave a Reply