நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வங்கிக் கடன் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால மீன் வளர்ப்பு மற்றும் கொடுவா மீன், இறால், நண்டு, கடலட்டை போன்ற பண்ணை வளர்ப்புத் திட்டங்களை விருத்தி செய்வதன் மூலம் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நீர்வேளாண்மையில் ஈடுபடுகின்றவர்களுக்கான முதலீடுகளை பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக கடன் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26/12) அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி வங்கியின் ஊடாக தலா 50 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் சுமார் 250 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும் பெற்று நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கான ஆரம்ப முதலீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், சம்மந்தப்பட்ட வங்கிகளின் பிரதேசப் பிரதானிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்ட இன்றைய விசேட கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.