இனவாதம், மதவாதம் குரோதங்கள் என்பன நாட்டில் தலைதூக்கி உள்ளதாக குற்றம் சுமத்தி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கம் தற்போது அவர்களுக்குள்ளே பல கூட்டங்களாக பிரிந்து ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (05/01) இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு விஜயம் செய்து, திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஆதரவாளர்களுடன் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, ஒருவருக்குள் ஒருவர் முட்டி மோதிக்கொண்டு, அரசாங்கத்திற்குள் என்ன நடந்தது என்று அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள்ளேயே பல பிளவுகள் ஏற்பட்டு பல கூட்டங்களாக பிளவுபட்டு உள்ளார்கள்.
அரசாங்கத்திற்குள் பல குழுக்கள் உருவாகி உள்ளன. ஆட்சிபீடத்தை கைப்பற்றுவதற்காக பிரசாரங்களை மேற்கொண்ட அதி புத்திசாலிகள் இன்றைய தினம் வெளிப்படையாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டை பிளவுபடுத்தியவர்கள் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில், பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது
இவ்வாறான தலைவர்களை வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக தூரத்தில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
(திருகோணமலை நிருபர்)