இந்தியா பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகள், இணைந்து உருவாக்கிய கடிதம், இறுதியாக வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கடிதமாக மாறிய கடிதத்தினை இன்று மாலை 6 மணிக்கு, குறித்த கட்சிகளின் தலைவர்கள் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தை தயாரித்த வட கிழக்கு தமிழ் கட்சிகள், இன்று காலை வேளையில் கையொப்பமிடலை நிறைவு செய்து ஆவணத்தை மாலை வெளியில் கையளிக்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால் இந்திய தூதுவர் கோபால் பாக்லே திடீரென இந்தியா, புது டெல்லிக்கு செல்வதாகவும், அதன் காரணமாக சந்திப்பை பிற்போடுவதாகவும், அவரை இன்று சந்திக்க முடியாதெனவும் இந்திய தூதரகம் குறித்த கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.
மேலும் இந்திய பயணத்தை தூதுவர் நிறைவு செய்து வந்ததும், எதிர்வரும் வாரம் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து தயாரிக்கப்பட்ட ஆவணம் கையளிக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூதுவர் திடீரென இந்தியா சென்றதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
