பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 75 வயதான ஓய்வுபெற்ற வைத்தியர் தான் இந்த திட்டத்தை வகுத்தமையை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்து, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் தேவாலயத்தின் சில விவகாரங்கள் மீது குரோதம் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு பொரளையிலுள்ள குறித்த தேவாலயத்தில் பௌத்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக அந்த நபர் தெரிவித்திருந்தார்.
இது கலப்புத் திருமணம் என்பதால் தேவாலயத்தின் தலைமை பாதிரியார் திருமணத்தை நடாத்துவதற்கு காலை நேரத்தை வழங்க மறுத்துவிட்டார் என்றும், இந்த சம்பவத்தால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் விளைவாகவே தேவாலயத்தை பழிவாங்கும் நோக்கில் கைக்குண்டை வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
