அரசாங்கம் நாளாந்தம் அறிவிக்கும் கொவிட் நோயாளர்களை விடவும் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தது.
நாளாந்தம் 2000 க்கும் மேற்பட்ட கொவிட் நோயாளர்கள் பதிவாவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகள் மற்றும் கல்வியற்கல்லூரிகளிலும் அதிகளவிலான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் கூறினர்.
2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி இலங்கையில் 351 கொவிட் நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், ஜனவரி 4 ஆம் திகதியளவில் அந்த எண்ணிக்கை 629 ஆக அதிகரித்தது. 5 ஆம் திகதி 550 நோயாளர்கள் பதிவாகினர்.
எவ்வாறாயினும், கடந்த ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 653 வரை அதிகரித்ததுடன், கடந்த 18 ஆம் திகதி வரை நாளாந்தம் 600 க்கும் 700 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.
ஜனவரி மாதம் 19 ஆம் திகதியில் இருந்து நாளாந்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்ததுடன், நேற்று முன்தினம் (26/01) 900 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகினர்.
இந்த வருட ஆரம்பம் முதல் அவ்வப்போது மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ஜனவரி மாதத்தில் அதிகளவிலான 23 COVID மரணங்கள் நேற்று (27/01) அறிவிக்கப்பட்டன. நேற்று 16 மரணங்கள் பதிவாகியிருந்தன.
கொவிட் சிகிச்சை நிலையங்களிலுள்ள 6,458 கட்டில்களும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் உள்ள 63 கட்டில்களும் நோயாளர்களுக்காக தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை பாடசாலைகளிலும் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியது.
நுவரெலியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அதிகம் கொவிட் தொற்று பரவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
