வவுனியாவில் பிறந்து வளர்ந்து, சுவிற்சலாந்து நாட்டில் வசித்து வரும் கந்தையா சிங்கம் என்பவருடைய புத்தக வெளியீடு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா கலை இலக்கிய நண்பர் வட்டத்தின் ஏற்பாட்டில், தமிழ் மணி அகளங்கனின் தலைமையில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
உலக தமிழர் இறகுப்பந்து(badminton) பேரவை, உலக தமிழர் சதுரங்க(chess) பேரவை, உலக தமிழர் புகைப்பட பேரவை போன்ற அமைப்புகளை உருவாக்கி சத்வதேச ரீதியில் தமிழர்களுக்கான பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருபவரும், இலங்கையில் பல சமூக சேவைகளையும் செய்து வருபவருமான கந்தையா சிங்கம் என அழைக்கப்படும் கந்தையா குமாரசிங்கம் தனது அனுபவங்களை, மற்றவர்களுக்கு உந்துசக்தியாக அமையும் வகையில் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
சுவிற்சலாந்தின் தூதரக மொழி பெயர்பாளராகவும், இன்னமும் பல முக்கிய பதவிகளையும் வகித்து வருகிறார் சிங்கம். பல நாடுகளுக்கும் சென்று பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் அவர், சர்வதேச அனுபவங்களையும், இலங்கையில் தனது ஆரம்ப வாழ்க்கை பயணங்களையும், அனுபவங்களையும், இலங்கை வந்த சென்ற ஏற்பாடு செய்த நிகழ்வுகள் தொடர்பிலான அனுபவ பகிர்வுகளையும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு உந்து சக்தி வழங்க கூடியதாக, ஆர்வம் ஏற்படுத்த கூடியதாகவும், தலைமத்துவ பண்பினையும், வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யக்கூடிய நிலையையும் உருவாக்கும் உந்து சக்தியினையும் வழங்கும்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி கதிர் சுவர்ணராஜா கலந்துகொண்டார். இங்கிலாந்தில் வசித்து வரும் கந்தவேல் நவநீதன் முதற் பிரதியினை பெற்றுக் கொண்டார். யாழ் பலக்லைக்கழகத்தின் முதுநிலை ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீகணேசன் நூல் வெளியீட்டுரையினை ஆற்றிய அதேவேளை, பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் வித்தியாரத்தினா சி.வரதராஜன் அறிமுக உரையினை நிகழ்த்தியிருந்தார்.
நகரசபை உறுப்பினர் மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன், பெளராணிகர் யோகசிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர்.




