யுக்ரைன் மீது ரஸ்சியா மேற்கொண்டுவரும் போர் இன்று எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஸ்சியா இராணுவத்தினர் 498 பேர் உயிரிழந்துள்ளதாக ரஸ்சியா தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுளளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
தமது இழப்புகள் பற்றி இதுவரை ரஸ்சியா எதுவும் தெரிவிக்காத நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரைன் தலைநகர் கிவ் நோக்கிய படையெடுப்பு தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 40 மைல் நீளமளவுக்கான போர் வாகன தொடரணியின் பயணம் வேகத்தை இழந்துள்ளது.
இராணுவ வீரர்களை மீள் ஒழுங்கமைப்பு செய்யவும், தாக்குதல் திட்டங்கள், முன் நகர்வுகளை ஒழுங்கு செய்வதிலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போரில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதேவேளை இராணுவ வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
யுக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சோன் ரஸ்சியா இராணுவத்தினால் முழுமையாக கைப்பற்றப்பட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு இன்று காலை முதல் தலைநகர் கிவ் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடாத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் இரண்டு நாட்டு பிரதிநிதிகளுக்குமிடையில் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்களை கலந்தாலோசிப்பதற்காக குறித்த பிரதிநிதிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர்.
இதுவரை 10 இலட்சம் மக்கள் அகதிகளாக யுக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
மக்கள் மீதி ரஸ்சியா தாக்குதல் நடாத்தியுளளதற்கான போர் குற்ற விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
