ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக எம்மை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொது அழைப்பு விடுத்துள்ளார். எமக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகம். ஆகவே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளும், தேவைகளும் இல்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆகவே அந்த அழைப்பினை தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, மக்கள் விடுதலை முன்னணி உடனும் தாம் பேசுச்சுவார்தைகளில் ஈடுபட தயாராகவில்லை என தெரிவித்துள்ளார்.
தான் அமைச்சரவை கூட்டங்களுக்கு சமூகமளிக்க போவதில்லை என்பதனை கடிதம் மூலமா இன்று ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணி மத்திய குழு அதற்கு அனுமதி வழங்கியுள்ளதோடு, அமைச்சு பதவியிலிருந்து விலக அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணி, பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தமக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும், ஆனால் எப்போது என்பது தீர்மானிக்கபபடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசனங்களிலேயே அமரவுள்ளதாகவும், எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரப்போவதில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.